×

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு பா.ஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ராஜஸ்தானில் 7 எம்பி உள்பட 41 பேருக்கு இடம், ராமன்சிங் உள்பட 68 பேருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தானில் போட்டியிடும் பா.ஜ முதல் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 7 எம்பிக்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா, மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜஸ்தானில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது. ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. அங்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு போட்டியிடும் பா.ஜ முதல் பட்டியலில் 41 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதில் 7 எம்பிக்கள் பெயா் இடம் பெற்றுள்ளது. அவர்கள் விவரம் வரமாறு: 1.தியா குமாரி (வித்யாதர் நகர்), 2.பகீரத் சவுத்ரி (கிஷன்கர்), 3.கிரோடி லால் மீனா (சவாய் மாதோபூர்), 4.தேவ்ஜி படேல் (சஞ்சூர்), 5.நரேந்திர குமார் (மண்டவா),6. ராஜ்யவர்தன் ரத்தோர் (ஜோத்வாரா) 7.பாபா பாலக்நாத் (திஜாரா). இதே போல் சட்டீஸ்கர் மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் 2வது பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் 64 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஏற்கனவே முதல்பட்டியலில் 21 பேர் பெயர்கள் இடம் பெற்று இருந்தன. மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அங்கு பா.ஜ சார்பில் தற்போது வரை 85 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2வது பட்டியலில் முன்னாள் முதல்வர் ராமன்சிங் அவரது சொந்த தொகுதியான ராஜ்நந்த்கான் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் எம்பிக்கள் ரேணுகா சிங், கோமதி சாய் ஆகியோரும் பா.ஜ சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். மத்தியபிரதேசத்தில் போட்டியிடும் பா.ஜ வேட்பாளர் 57 பேர் கொண்ட 4வது பட்டியல் நேற்று வெளியானது. இதில் இடம் பெற்ற அனைவரும் சிட்டிங் எம்எல்ஏக்கள் ஆவார்கள். முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பெயர் இடம் பெற்று உள்ளது. அவர் தனது பாரம்பரிய தொகுதியான புத்னி தொகுதியில் 6வது முறையாக நிறுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மீண்டும் தாதியா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 24 அமைச்சர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளனர். 230 தொகுதிகள் கொண்ட மபியில் மட்டும் பா.ஜ இதுவரை 136 வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

* அக்டோபர் 1ம் தேதியே தயார்
பா.ஜ வேட்பாளர் பட்டியல் குறித்து மத்திய தேர்தல் கமிட்டி பிரதமர் மோடி, பா.ஜ தேசிய தலைவர் நட்டா தலைமையில் அக்டோபர் 1ம் தேதியே ஆலோசனை நடத்தியது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ராஜஸ்தான், மபி, சட்டீஸ்கர் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.

The post 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு பா.ஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ராஜஸ்தானில் 7 எம்பி உள்பட 41 பேருக்கு இடம், ராமன்சிங் உள்பட 68 பேருக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajasthan ,Ramansingh ,New Delhi ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...